Thursday, June 27, 2013

25 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம்


       இருபத்தைந்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்று 

ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள 

வனப்பகுதி இதுரு நகரம். அப்பகுதியில் மிகப் பழமையான கல்மர படிவம்

ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் மண்ணியல் தாவரவியல் மற்றும் வனத்துறை 

நிபுணர்கள். பொதுவாக பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதையுண்ட

மரங்கள், மண் மற்றும் பாறையுடன் இறுகி ரசாயன மாற்றங்களால் கல்மரம்

படிவங்களாக மாறுகின்றன.



     முதல் கட்ட கணிப்பில், இந்த கல்மரம் சுமார் 12 கோடி முதல் 25  கோடி

ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. 

இதுரு நகரம் வனப்பகுதிக்குட்பட்ட சிட்யால், சிந்தகுடா, வடக்கு சர்வை, தெற்கு 

சர்வை காடுகளில் இது போன்ற கல்மரங்கள் அதிகளவில் காணப்படுவதாக 

நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இப்பகுதி மண்ணியல் மரபு பகுதியாக 

அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது



Sunday, June 23, 2013


நானும் ஒரு மனிதனாக பிறந்ததற்கு வேதனைப்படுகிறேன்.


                    
உத்தர்காண்ட் மாநிலத்தில் மனதை உறையவைக்கும் பேரழிவு  

நடந்தள்ளது.இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத்

பத்திரிநாத் போன்ற பகுதிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில 

மக்கள் ஆன்மிக சுற்றுலா சென்றள்ளனர். 

இந்த அன்மிக சுற்றுலாவில் ஆண்டவனின் அருள் கிடைத்ததோ 

இல்லையோ, கொடூர மனிதர்களின் ஒட்டுமொத்த உருவத்தையும் 

பார்த்தார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம். 10 ஆயிரத்திற்கும் 

அதிகமானோர் கானாமல் போயினர். வழி தடைபட்டு 

வெளியேறமுடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில்.  

எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி

கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து

நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்பதே நமது 

மனஓட்டமாக உள்ளது.
            


தமிழ்நாட்டு  பெண்மணி ஒருவர் சாப்பிட உணவு கிடைக்காமல் 

பசியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியும் வெளியாகியது. இந்த 

சூழலில், காட்டு மிருகங்களையும் மிஞ்சும் கேவலமான 

மக்களையும் அங்கு பார்க்க முடிகிறது.  அங்கே தத்தளிக்கும் 

மக்கள் தண்ணீர்த் தாகத்துடனும், கடும் பசியுடனும், உயிர் மரணப் 

போராட்டம் நடத்துகின்றனர்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தற்காலிகக் கடை நடத்தும் சிலர், ,
பரோட்டா 250 ரூபாய், ஒரு பாட்டில் தண்ணீர்  200 ரூபாய், ஒரு 

சிறிய சிப்ஸ் பாக்கெட்  100 ரூபாய், ஒரு சிறிய சப்பாத்தி 150 

ரூபாய், ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்)  100 ரூபாய், ஒரு சிறிய 

கப் சாதம்  50 ரூபாய் என்று விற்றார்களே, பணம் 

இல்லையென்றால் அணிந்திருக்கும் தங்க நகையை கொடு என்று 

பிடுங்கி திண்றார்களே, கேவலம் இந்த மனித கூட்டத்திடையே 

நானும் ஒரு மனிதனாக பிறந்ததற்கு வேதனைப்படுகிறேன். 

                   

பக்தி வியாபாரம் என்ற பெயரால் பிணங்களைத் கொத்தித் தின்னும் 

கழுகுகளை விட கேவலமாக உயிரோடு உள்ளவர்களை 

குத்திக்கிழிக்கும் பிணந்திண்ணிகளை என்ன செய்யலாம். பாரத 

கலாச்சாரத்தையும், லார்டு ஷிவாவையும் பெருமைபட பேசும் 

வெளிநாட்டினர் முகத்தில் இனி நாம் எப்படி விழிப்பது. ஆன்மிகம், 

பக்தி சுற்றுலா என்ற பெயரில் அப்பாவி மக்களை 

பாதுகாப்பில்லாமல் அங்கே கூட்டிச் செல்லும் சிவனடியார்களை சீ 

என்று சொல்லுபவர்களை எப்படி தடுப்பது.




அமைச்சரே,

இந்த என்.எல்.சி தொழிற்சங்கத்தோட அக்கப்போரு அதிகமாகிப் போச்சி.

என்.எல்.சி பங்குகளை வித்தா நிறைய பணம் கிடைக்கும். நம்ம கஜானாவை நிரப்பி வைச்சுட்டா கவலையில்லாம இருக்கலாம்னு பாத்தா, விடமாட்டாங்க போலிருக்கே, ம்...

அட, இந்த நிலக்கரி, தொலைதொடர்பு, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி இந்த தொந்தரவெல்லாம் நமக்கு எதற்கு? .
இதையெல்லாம் தனியாரிடம் விற்றுவிடலாம்.

அக்கா மாலா கப்சிய மட்டும் (சாராயம்) அரசாங்கம் தான் விக்கனும்னு அறிவிப்பு பலகையை அங்காங்கே மாட்டுங்கள் அமைச்சரே...
  • உத்தர்காண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டம், ரிஷிகேஷ் நகராட்சியில் கந்கை நதிக்கரையில் அமைக்கப்பட்ட 30 அடி உயர சிவன் சிலை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


                    
          இமாச்சலப் பிரதேசம்,  உத்தரகாண்ட்,  ஜம்மு-காஷ்மீர் போன்ற  மாநிலங்களில் எந்த நேரமும் நிலச்சரிவு ,  வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா ஆறும் பாகீரதி ஆறும் இணைந்து கங்கை நதியாக மாறி ஓடுகிறது. 14 ஆறுகள் குறுக்கும்நெடுக்குமாக ஓடுகின்றன. 
                    
           ஆற்றின் கரை ஒரங்களில் 220  மின்சக்தித் திட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களுக்காக சில ஆறுகளை சுரங்க வழிகளில்  திசை திருப்பிக் கொண்டுசெல்கிறார்கள். ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதெல்லாம் இயற்கைக்கு விரோதமானது. இதுமாதிரியான திட்டங்களால்தான் இயற்கை சீற்றம் மக்களைத் தாக்குகிறது. 

                                                                              
                    
         இந்த முறை, பருவ மழை கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. 2013 ஜூன் மாதம் 17 ந்தேதி முதல் இங்கு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் பலத்த மழையில் அணைகள் நிரம்பி வழிகிறது. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

      நூற்றுக்கணக்கானோர் உயிரிப்பு. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழியில்லாமல் தீவு போல் மாறிபோன பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மக்கள் பலர் ஆன்மிக சுற்றுலா சென்று சிக்கியுள்ளனர்.   5 முறை பாரதிய ஜனதா கட்சியும், 2 முறை காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தும் இந்த மாநிலத்தில் தேவையான முன்னேற்பாடுகளை செய்யாமல்விட்டதுதான் பயங்கரப் பாதிப்புகள் ஏற்படக் காரணம். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் பகுகுணா முதல்வராக உள்ளார்.  

         1991 ம் ஆண்டு உத்தரகாசி ஏரியாவில் நிலநடுக்கம், 1999 ம் ஆண்டு சமோலி ஏரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவை இங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பயத்தில் கட்டுமான பணிகளில் எச்சரிக்கையாக இருந்த மக்கள் மீண்டும் பயம் தெளிந்து இயற்கைக்கு விரோதமாக கட்டுமான பணிகளை துவக்கினர். இது போன்ற காரணங்களே இந்த பேரழிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Saturday, June 22, 2013

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு                           பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு ஏன் மாறவில்லை?                                                      நம்ம பாரத்த்தில் சோத்துச் சண்டை ஏன் தீரவில்லை?

நுகர்வு கலாச்சாரம் :


               ஒரு தேசத்தின் நுகர்வுக் கலாச்சாரம் எத்தகையதோ, அதற்கேற்றவாறே நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இருக்கும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள், உடை, சோப்பு, ஷாம்பு, பற்பசை, வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களையும் எப்படி வாங்க வேண்டும், எங்கு வாங்க வேண்டும் என்று பெரும்பாலும் நாம் முடிவு செய்வதல்ல. நம் அறிவையும், புத்தியையும் மழுங்கடித்து நம் மீது ஒரு முடிவு திணிக்கப்படுகிறது.
           அப்படி திணிக்கும் கூட்டம் மிக அறிவாற்றல் கொண்ட கூட்டம் என்பது அர்த்தமல்ல. அயோக்கியதனமான கூட்டம். பேராசைக்கூட்டம். நாடு சுடுகாடானாலும் நமக்கென்ன, லாப வெறியே முக்கியம் என நினைக்கும் ஒரு ஈனமான கூட்டம் என்பது தான் உண்மை.

பெருகிய திண்பண்டம் :

                   
நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் அதை நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்னு ஒரு பாட்டு உண்டு. நம்ம தமிழகத்துல விதவிதமான உணவு பண்டங்கள் அந்தந்த ஊருக்கே பெருமை சேர்க்கும். திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருப்பதி லட்டு,  திருவில்லிப்புதூர் பால்கோவா,  பழனி பஞ்சாமிர்தம், கல்லிடைக்குறிச்சி அப்பளம், என்று ஒவ்வொரு பகுதியின் தனித்தன்மைக்கேற்ப சுவையுடன் கூடிய உணவு வகைகள் விளங்கி வந்தன. முறுக்கு,  கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், வெல்லம், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பொருட்கள் தான் ஒரு காலத்தில் கடைகளில் திண்பண்டங்களாக விற்கப்பட்டன.
                   வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பன்னீர் சோடா, அஜீரணம், வயிற்று வலி என்றால் உப்பு சோடா அவ்வளவே. இப்போ, எந்த கிராமமாக இருந்தாலும், லேஸ், குர்குரே, பிங்கோ டேங்கில்ஸ், ஸ்னிக்கர்ஸ், சாக்கோ பார், மானங்கெட்ட கேட்பரி டெய்ரி மில்க், வேப்பர்ஸ், பல்வேறு சுவைகளில், மணங்களில் வெளிநாட்டு சாக்லேட்ஸ் என நூற்றுக்கணக்கான திண்பண்டங்கள் விற்கப்படுகிறது.

பாரம்பரிய பாணம் :


           நீராகாரம், மோர், சுக்குதண்ணி, பதனி, எளனி போன்ற உடல்நல பானங்களை பருகிவந்த மக்கள், கோக், பெப்சி, பேன்டா ன்னும், மிரண்டா உள்ளே போனால் கலாட்டா வெளியே வரும் என்கிற கருமங்களையெல்லாம் பருகிவருகின்றனர். இது பரவாயில்ல, நிலத்தடி நீரை விஷமாக்கிவிட்டு, மருந்து போட்டு வடிகட்டிய, மாதக்கணக்கில் கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் நிலவுகிறது. பாக்கெட்களில் விதவிதமாக ரெடிமேட் பழச்சாறுகள். பாலும், குடிநீரும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் தேசிய நீர்கொள்கை சட்டம் வேற வரப்போகுதாம். நாடு வௌங்கின மாதிரிதான்.
           குந்தைகளை ஆரோக்கியமாக உயரமாக வளர்க்க வேண்டுமானால் ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட் கொடுக்க வேண்டும் என்று எங்கள் சோதனையில் தெரியவந்தது என ஆளாளுக்கு ஒரு அயோக்கியதனமான விளம்பரம்.  ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன் வளர்ந்த எந்த குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளரவில்லையா?,  
                   அட கோமாளி பசங்களா,  இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவங்களோட பேரை கூடநினைவில் வைத்துக் கொள்ள வக்கில்லாமலா நம் வீட்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ள காம்ப்ளான் மெமரி சார்ஜஸ் சாப்பிட வேண்டுமாம். ஒவ்வொரு வயதிற்கும் ஒரு மாடல் (ஆனால் எல்லா டப்பாவிலும் அதே உலுத்து போன மாவு தான் இருக்கும் என்பது வேறு விஷயம்)
                 
மாறிய உணவு பழக்கம் :


                                        எக்ஸ்பிரஸ் வேக வாழ்க்கை முறை, நேரமின்மை, அவசர கோலத்தின் விளைவாக, தோசை மாவு பாக்கெட், ரெடிமேட் சப்பாத்தி, பாக்கெட்டில் குழம்பு, பிரைட் ரைஸ், பீசா, பர்கர், ஸ்பிரிங்ரோல் என ரெடிமேட் உணவு வகைகளின் ஆக்கிரமிப்பு அனைத்து ஊர்களிலும் அலங்கரிக்கிறது. கே.எப்.சி சிக்கனுக்கென்றே ஒரு ரசிகர் மன்றம் உள்ளது.
                         கே.எப்.சி சிக்கன் பீசும், கோலாவும் மட்டும் ஒரு வேளை உணவாக பலர் சாப்பிடுவதை பார்க்கிறோம். பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு, ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்தியாவில்சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் திட்டமிட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

பறிபோன பாரம்பரிய விதைகள் :


                  தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா,  குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா,  கவுனி அரிசி, ஆற்காடு கிச்சடி, வையக்குண்டா, குதிரைவால், தங்கச்சம்பா, டொப்பிச்சம்பா, சீரகச்சம்பா, ஆனைக்கொம்பன், கார்சம்பா, கார்த்திகைச்சம்பா, ஆத்தூர் கிச்சடி, சிறுகமணி, செங்காரி, பூனைக்காரி, கட்டைச்சம்பா, பிசாளம் போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்துவிட்டன. தற்போது,  ஐ.ஆர் 20, பொன்னி, டீலக்ஸ் என்ற கலப்பு ரகங்கள் மட்டுமே நம் பசிக்கு சோறாகிறது.
         தக்காளி, அவரை, முருங்கை, மிளகாய், கத்திரி, வெண்டை, மிளகாய், பருத்தி, தேங்காய், வாழை என அனைத்து வேளாண் பொருட்களும் பாரம்பரிய விதை ரகங்கள் அழிந்து போய், உயிரி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரகங்களும், ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய மலட்டு விதைகளும் தான் நம்மிடம் மிஞ்சியுள்ளது. இப்படி விளைபவை புற்றுநோயை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்றெல்லாம் எச்சரிக்கைகள் இருந்தாலும் அவை புறக்கணிக்கப்பட்டு "புதிய கண்டுபிடிப்புகள்' என்று கூறி இந்திய விவசாயத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

ரசாயன பொருட்களால் வரும் கேடு :

                              நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.
                       இதன் விளைவாக நம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு,  இருதய நோய்கள், புற்றுநோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுகளில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வு :

                                    மரபனு மாற்றப்பட்ட விதைகளாலும், உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் மண் மாசுபட்டதாலும், உணவு பொருட்களின் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு என பெருமையாக பாடிய நிலை மாறி, இன்று புஞ்சையும் இல்லை, நஞ்சையும் இல்லை. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணங்களால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
 
மருத்துவ தன்மை :

                 நமது பாரம்பரியம் என்பது, உணவை மருந்தாகக் கொண்டிருந்தது. உடல் உழைப்பை அதிகமாகக் கொண்ட வாழ்க்கை முறை இருந்தது. கேழ்வரகு,  கம்பு, சோளம்,  சாமை வரகு, கொள்ளு, தினை ஆகிய சிறு தானியங்கள் பழக்கத்தில் இருந்தது. சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்ட நோய்கள் இயற்கையாக கட்டுப்படுத்தப்பட்டன. சிறு, சிறு உடல் உபாதைகளுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, பூண்டு, வேப்பிலை, வெத்தலை, இஞ்சி உள்ளிட்ட பல மூலைகைகளை பயன்படுத்தினோம்.
              இன்று வியர்குரு வந்தாலும், விக்கலெடுத்தாலும் ஆங்கில மருந்துகளை தேடி ஓடுகிறோம். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, இசிஜி, அல்ட்ரா ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன், எக்கோ டெஸ்ட்,  என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இ.என்.டி, ஆர்த்தோ, நியூராலஜி, பாத்தாஜி, ஆப்தமாலஜி, நெப்ராலஜி, கியன்ஸ்பாலஜி, சர்ஜரி, அனஸ்தீசியாலஜி, கார்டியாலஜி என நோய் பிரிவுகள் நம்மை பயமுறுத்துகிறது.
             இன்றைய அலோபதி மருந்துகள் அரசியலாக்கப்பட்டு பல மடங்கு லாபம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் 100 ரூபாய்க்கு விற்கும் மருந்தை, நமது அரசுத்துறையே தயாரித்தால் 3 ரூபாய்க்கு விற்க முடியும்.
                ஆனால் அரசு செய்வதில்லை. அதில் அரசியல் உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளிடம் இருக்கும் மருந்துக்கு ஏற்றவாறு நம் நாட்டில் நோய் இருக்க வேண்டும் என்பது தொலை நோக்கு திட்டம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  மாறிவரும் உணவு பழக்கமும் இந்த பாதிப்புகளுக்கு ஒரு காரணம்.

Monday, June 17, 2013


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களுக்கு வாகன வசதி இல்லாததால் கழுதைகள் மீது கொண்டு செல்லப்படும் பொருட்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சத்திய விஜயநகர அரண்மனை
சகஜானந்தர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில், 1890ஜன. 27 ல்  அண்ணாமலை - அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர்  முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்.

சிதம்பரத்தில் நந்தனார் கல்விக்கழகம் 1916 ல் துவக்கப்பட்டது. 20.05.1917 ல் முதல் வகுப்பு நடத்தப்பட்டது.

1927 ல் உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.

1939 ல் நந்தனார் கல்வி கழகத்தை அரசே நடத்த வேண்டும் என சகஜானந்தர் கோரிக்கை வைத்தார்.

1940 ல் அண்ணாமலை பல்கலை கழகம் சகஜானந்தரை தமிழறிஞர் என பட்டம் கொடுத்து கௌரவம் செய்தது.

1926 முதல் 1932 வரை சென்னை மாகான சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.

1936 ல் இருந்து 1959 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப்பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் குரலெழுப்பினார். (சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்பு தொகுதி எண் 7, 1947 அக்டோபர் 29 பக்கம் 61,62)

1934 ல் சகஜானந்தர் சிதம்பரம் ஆலய நுழைவு போராட்டத்தை துவக்கினார்.

2.6. 1947 ல் ஆலய நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

• 1938 ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று பேசினார்.
தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு ஈ.வெ.ரா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951 ல் சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
 இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள்.
ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிடம் உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390).


   
 

நல்ல செயல்களை உடனே செய்பவர்கள் நல்ல சாதியினர்

சேலம் மாவட்டத்தில் வீணு என்ற மாணவியும் அவரின் தந்தை முத்துகிருஷ்ணனும் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்துள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன் பேசியதாவது,  என் மகள்  வீணு  பிளஸ் 2 வில் 904 மதிப்பெண்  எடுத்தும் அரசு கல்லூரிகள்ல இடம் கிடைக்கவில்லை.   காரணம் சாதி சான்றிதழ். நாங்க இந்து மன்னன் சாதியை சேர்ந்தவர்கள். இது எஸ்.டி பிரிவில் சேர்கிறது. அரசானை 1773 23.06.1984 தேதியிட்ட எஸ்.சி எஸ்.டி ஆக்ட் 1976 கீழ் வழங்கப்பட்டது. எனக்கு சாதி சான்றிதழ் உள்ளது. எனக்கு 3 குழந்தைகள் ஆனால் மூவருக்கும் சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். சாதி சான்றிதழ் இல்லாமல் அரசு கல்லூரியில் சேர்த்து கொள்ள மாறுகிறார்கள். சாதாரண கூலி வேலை செய்யும் நான் என் மூன்று பிள்ளைகளையும் தனியாரில் பணம் கட்டி சேர்க்க இயலாது. எனவே என் பிள்ளைக்கு சாதி சான்றிதழ் வழங்கி கல்விக்கு உதவுங்கள்' என்றார். நான் மேல படிக்கனும்னா எப்படியாவது எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்கணும் அப்போதான் அரசின் சலுகைகள் கிடைத்து கல்வியில் நான் சாதிக்க முடியும்' என்றார் மாணவி வீணு