Wednesday, September 7, 2016

நிலமடந்தையின் சீர் இளமை

மனிதர்கள் வசிக்கும் குடும்பம், வீடு,
நாடு, நகரம்,
உலகம், கண்டம் என,
அனைத்தையும் தாங்கி நிற்பது நமது பூமிப் பந்துதான்.
இந்த பூமிப் பந்தின் மீது தான், சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட பிரிவினைகள் கொண்ட தேசங்கள் அமைந்துள்ளது.  
பண்டைய ராஜ்ஜியங்கள் முதல், இன்றைக்கு எல்லைப் பரச்சனைகளில், தீர்வு காண முடியாமல் துடிக்கும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளும் இருக்கின்றன.
இப்படி அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்த பூமியை போற்றிப் பாடுவதே தாய் வாழ்தாகிறது. தமிழகத்தின் பூமியை போற்றிப் பாடுகையில், நமது பூமியை, எதோடு ஒப்பிடுவது.
மனிதர்கள் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், சிந்து நதிக்கரையோரம், சிந்து சமவெளி நாகரிகம் வளரத்தொடங்கியது. அதன் பின்னாட்களில், தென்னிந்தியாவில் திராவிட நாகரிகம் மெல்ல வளர்ச்சி பெற்றது.
பூமியில், இன்று வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சியும், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் வரலாறுகளும், இந்த நிலத்தின் மீதே நடந்துள்ளது.
பண்டைய மன்னர்கள் முதல், இன்றைய வளர்ந்த நாடுகள் வரை தங்களின் மிகப்பெரிய சொத்தாக கருதியது இந்த நிலத்தை தான்.
அவ்வகையில், தமிழக நிலத்தின் பெருமையை போற்றுவது தான், பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டு, 1970 ம் ஆண்டு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நம் தமிழ்தாய் வாழ்த்து.
தமிழ்த்தாய் வாழ்த்தில், தமிழக நிலம் போற்றிப் பாடப்படுகிறது. அதில், தமிழக நிலம்  எப்படி உருவகப்படுத்தப்படுகிறது?. எப்படி போற்றப்படுகிறது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்..
தமிகத்தின் பண்டைய நூல்களில் ஒன்றான திருக்குறளில், 
வாழ வழியில்லை என்று, சோம்பி இருப்பவரை பார்த்தால் நிலமென்னும் நல்லாள் நகும்
என்று, நிலத்தை பெண்னாக உருவகப்படுத்தினார் திருவள்ளூவர். தமிழக மூதுரைகளிலும், நிலம் பெண் உருவமாகவே பாவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே நிலம் என்பது, நிலமடந்தையாக உருப்பெறுகிறது.
நில மடந்தை... 
எப்படிப்பட்ட நிலமடந்தை ?.
கடலை ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள நில மடந்தை.
ஏன் நில மடந்தை என்பவள், கடலை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும்?.
இந்த பூமிப்பந்து என்பது, 3 பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் அமையப்பெற்றது.
நிலம் என்பது, நில மடந்தையாயின்,
அவள் எப்படி ஆடை அணிய வேண்டும்?.
தனது உடலின் பெரும்பாலான பகுதியை மறைக்கும் விதமாக, பெரிய ஆடையை உடையாக அணிய வேண்டும். என்பதே தமிழக மரபு.
இந்த பூமிப்பரப்பில் பெரிய உடையாக விளங்குவது கடல் தான்.
எனவே, நில மடந்தை என்பவள், கடலை உடையாக உடுத்திக் கொண்டாள்.
கடல் உடுத்த நிலமடந்தை,
நில மடந்தை, எப்படிப்பட்ட கடலை உடையாக உடுத்திக் கொண்டாள் தெரியுமா?.
நீர் ஆரும் கடல்,
கடல் பரப்பும், அதில் இருக்கும் தண்ணீரும் தனித்தனியாக பிரியாமல், கடல்பரப்பு முழுவதும், ஆரவாரத்துடன் தண்ணீர் நிரம்பியிருக்கும், நீர்ஆரும் கடலை உடுத்திக் கொண்டாள்.
இப்போது, நில மடந்தை என்பவள், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை யானாள்.
நில மடந்தைக்கு எழில் ஒழுகும்.
அந்த நில மடந்தைக்கு, அழகு என்னும் எழில் ஒழுகுகிறது.
ஏன், அழகு என்னும் எழில் ஒழுகுகிறது?.
அபரிமிதமாக இருக்கும் அழகு ஒழுகும்.
எப்படி,
தமிழகத்தின் புராதன பக்தி இலக்கியங்களில் ஒரு பாடல் உதாரணம்.
சைவ எல்லப்ப நாவலர் என்னும் பெரும் புலவர், அருணாச்சல புராணத்தில் அம்மனை இவ்வாறு வர்ணிக்கிறார்.
கார் ஒழுகும் குழலாளை,
கருணை வழிந்து ஒழுகும் இரு கடைக்கண்ணாளை,
இள நிலவு ஒழுகும் புண்ணகையாளை,
அழகு ஒழுகும் முகத்தினாளை,
வாரல் ஒழுகும் தனத்தாளை,
சீர் ஒழுகும் பதத்தாளை.... என்று தொடர்கிறார்.
இதை போலவே, எழிலொழுகும் நில மடந்தை.
சீர் ஆரும் வதனம்...
இதில் வதனம் என்பது நிலமடந்தையின் முகம்.
வதனம் என்னும் சொல்லாடலை,
உவமை சொல்ல ஒப்பில்லாத வனிதையர் வதனம் என்று கம்பராமாயணத்தின் நாட்டுப்படலமும்,
வதனமே சந்திர பிம்பமோ.. என்ற திரைப்பாடலை பாபநாசம் சிவனும், மதிமவதனம் என சங்ககால நூல்களும் வர்ணித்துள்ளது.
இங்கே நம் நில மடந்தையின் முகமான வதனம் எத்தகையது?.
சீர் ஆரும் வதனம்....
பெண்களுக்கு சீர் செய்வது  தமிழர்களின் மரபு.
அப்படி சீர் செய்து அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் முகம் எப்படி இருக்கும்.
நெற்றிப் பட்டம், சடைநாகம், மூக்குத்தி, தோடு, கடுக்கன், தொங்கட்டான், சங்கிலி, அட்டியல், பாம்படம், பதக்கம், காப்பு, வளையல், மோதிரம், ஒட்டியானம், வளை, சதங்கை,  காற் சங்கிலி, சிலம்பு உள்ளிட்ட சீர்களை அணியப்பட்ட பெண்ணின் முகம் பிரகாசமாய் ஜொலிக்குமல்லவா?.
அது போலவே, நம் நிலமடந்தையும்,
செல்வம், வீரம், அழகு, சாகுபடி, பெருமை, விருந்தினர் உபசரிப்பு, நன்மை, பண்பாடு, புகழ், தொழில் வளம், கலை வளம் உள்ளிட்ட சீர்களை அணியப்பட்டு, சீர் நிறைந்த, சீர் ஆர்ந்த முகமாக, சீர் ஆரும் வதனம் ஜொலிக்கிறது.
சீர் ஆரும் வதனம் எனத் திகழ் பரதக் கண்டம் இதில்
சீர் ஆரும் வதனம் என திகழும் இந்த இந்திய நாட்டில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

ஆந்திரா, கேரளா, கர்னாடகா போன்ற தெற்கு மாநிலங்களும், அந்த மாநிலங்களில் சிறப்பான, பெருமை மிக்க திராவிட நாடான தமிழகமும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அழகான முகம் என்றால், அந்த முகத்தில் அமைந்திருக்கும் உறுப்புகளான, கண்.காது, மூக்கு, நெற்றி, இமை, வாய் கன்னம் ஆகிய அனைத்தும் முகத்தின் அளவிற்கு தக்கவாறு பொருத்தமான அளவுகளில் இருக்க வேண்டும்.
அவ்வாறே, திராவிட தமிழகம் என்பது, தெக்கணப் பகுதியான முகத்திற்கு பொருத்தமாக, சிறிய அளவில் இருக்கும் நெற்றியாகவும், பிறைபோன்ற கண் இமையாகவும் உள்ளது. அதேபோல் அந்த நெற்றிப் பகுதியில், சந்தனம், அகில் போன்ற நறுமன பொருட்களால் இடப்பட்ட திலகம் போல், பெருமை எனும் நறுமண திலகமாக விளங்குகிறது.
அத் திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பம் உற
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே,
அந்த நறுமண திலக வாசனை போன்ற, பெருமை மிக்க தமிழகத்தின் சிறப்பு, உலகமனைத்தும் இன்பம் பெறும் வகையுலும், திசைகளெட்டிலும், புகழ் மணம் பரப்பும் தமிழ் பெண்ணே,
உன் சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!

இளமை பருவம் என்பது, வேகமான மாற்றங்களை இலகுவில் ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ள்ளும் தன்மை கொண்டது. செயற்திறன் மிக்கது. சாதாரண இளமையே இத்தகைய மகத்துவம் கொண்டது என்றால்,
முறைப்படுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு. சீரமைக்கப்பட்ட, சீர் இளமையின் செயல் திறன், காலங்களை கடந்தும், இளமை மாறாமல் மின்னும் இயல்புடையது.
மனிதர்களை வியப்படையச் செய்யும் பல்வேறு காரணிகள் இந்த உலகில் உண்டு. இயற்கையாகவும், செயற்கையாகவும் நமக்கு வியப்புகள் ஏற்படும் போது, நாம் சிந்தை மறந்து போய்விடுவோம்.
மனிதன் ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது,  திடீரென ஏற்படும் வியப்பு, அவன் சிந்தனையை மறக்கச் செய்தாலும், செயல் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
ஆனால், நம் நிலமடந்தையின், சீரிளமைத் திறன், தரும் வியப்பு மட்டும் தான், நம் செயலையும் மறக்கச் செய்கிறது.     
செயல் மறக்கச் செய்யும் அந்த நில மடந்தையின், சீரிளமைத் திறனை,
வாழ்த்துதுமே,,, 
வாழ்த்துமே,,,

வாழ்த்துமே....